Wednesday, September 24, 2014

ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில் திருச்சி மாவட்டம்

ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில் திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் அமைந்துள்ள தொன்மையான சிவபெருமான் திருக்கோயில்.ராஜராஜசோழ மன்னரால் கட்டப்பட்ட பழைமையான தேவார வைப்புத் தலம். சோழ மன்னர்கள், விஜய நகர, பாண்டிய மன்னர்களாலும் திருப்பணிகள் செய்யப்பட்ட திருக்கோயில்.
இத்திருக்கோயில் பற்றி அப்பர் திருப்பாடல்கள், க்ஷேத்திரக்கோவை-திருத்தாண்டகம் பாடல்கள் குறிப்பிடுகின்றன

தலவரலாறு

ஊட்டத்தூரின் மேற்கே உள்ள சோளேஸ்வரம் எனும் கோயிலை அமைத்த ராஜராஜ சோழன் அடிக்கடி அப்பகுதிக்கு வருவது வழக்கமாக இருந்த சமயம் ஒருமுறை மன்னர் வருகைக்காகப் பாதையைச் சரிசெய்யும் பணியில் மண்வெட்டியால் புல் செதுக்கும் பொழுது ஓரிடத்தில் இரத்தம் வரவே, இச்செய்தி மன்னரிடம் தெரிவிக்கப்பட்டது. மன்னர் வந்து சோதித்து சிவலிங்கத்தைக் கண்டு, மன்னிக்க வேண்டி அவருக்கு திருக்கோயில் எழுப்பினார். மூலவர் சிவலிங்கத்தின் தலைப்பகுதியில் மண்வெட்டி வடு உள்ளது.


ராஜகோபுரம்

ஏழுநிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது.

தேவார வைப்புத் தலம்

அப்பர் பெருமான் பாடலூரிலிருந்து ஊட்டத்தூர் சிவபெருமானைப் பாடியுள்ளார்.

பஞ்சநதனக்கல்

பஞ்சநதனக்கல் எனும் அரிய வகைக் கல்லில் செய்யப்பட்ட எட்டு அடி உயர நடராஜப்பெருமான் சிலை வழிபாட்டில் உள்ளது.

சிறப்பு

கட்டடக்கலை சிறப்பு

வருடந்தோறும் தமிழ் மாசி மாதம் 12,13,14 ஆம் தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவபெருமான் மீது விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

நோய்தீர்க்கும் தீர்த்தம்

பஞ்சநதனக்கல்லுக்கு மருத்துவச் சிறப்புகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. பஞ்சநதனக்கல் நடராஜருக்கு வெட்டிவேர் மாலையிட்டுப் பின்னர் அம்மாலையைப் பிரம்ம தீர்த்தத்தில் போட்டு அந்த தீர்த்தத்தைப் பருக சிறுநீரகக்கோளாறுகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

முள் படுகளம்

வருடந்தோறும் முள் படுகளம் எனும் இருபதுக்கும் மேலான கிராம மக்கள் பங்கு பெறும் திருவிழா இத்திருத்தலத்தில் நடைபெறுகின்றது.

திருட்டு

லால்குடி, நவ 19: திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேசுவரர் கோயிலின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 3 வெண்கலச் சிலைகள் திருடப்பட்டன. மேலும், கோயில் உண்டியலும் உடைக்கப்பட்டுள்ளது.
 லால்குடி அருகேயுள்ள புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊட்டத்தூர் ஊராட்சியில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட- மிகவும் பழைமை வாய்ந்த அருள்மிகு சுத்தரத்தினேசுவரர் கோயில் உள்ளது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோயிலின் சுற்றுச்சுவர் சுமார் 50 அடி உயரம் கொண்டது.
 ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் "முள் படுகளம்' திருவிழா இங்கு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் சுற்றுப்பகுதியிலுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பார்கள். இத்தகைய பிரசித்திப் பெற்ற கோயிலின் அர்ச்சகர்கள், இதே கிராமத்தைச் சேர்ந்த ராமநாதன் (65), இவரது மகன் நடராஜன் (45) இருவரும் சனிக்கிழமை காலை 7 மணிக்கு வழக்கம்போல கோயிலைத் திறந்து உள்ளே சென்றனர். உள்பிரகார கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து மேலும் உள்ளே சென்று பார்த்தனர். கோயிலின் மையப் பகுதியிலிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு சில்லறைகள் சிதறிக் கிடந்தன. கருவறையின் பின்புறம் இருந்த அம்பாளுடன் இணைந்த ஸ்கந்தர், சண்டிகேசுவர், விநாயகர் ஆகிய 3 வெண்கலச் சிலைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இவை ஒவ்வொன்றும் ஏறத்தாழ இரண்டரை அடி உயரம் கொண்டவை.
 இதையடுத்து உள்ளூர் பிரமுகர்களுக்கும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து சிறுகனூர் போலீஸôர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ஜாக் வரவழைக்கப்பட்டது. விரல் ரேகை நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.
 16 நாள்களில்...
 புள்ளம்பாடியில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள 3 சிலைகள் கடந்த 3-ம் தேதி திருடு போனது. தற்போது 16 நாள்களில் இந்தத் திருட்டு நிகழ்ந்துள்ளது. இதே கோயிலில் 2002-ம் ஆண்டில் திருடுபோய், மீட்கப்பட்ட சிலை ஒன்று நீதிமன்றத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
                                                                       Ganesan Pondicherry
                                                                              http://suththarathineshwarar.blogspot.in/

No comments:

Post a Comment